நியூயார்க்: குஜராத் மாநிலத்தின் வதோதராவை சேர்ந்தவர் மயூஷி பகத். இவர் 2016-ல் அமெரிக்கா வந்தார். நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்துக் கொண்டிருந்தார். ஜெர்சி சிட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இவர் தங்கியிருந்தார்.கடந்த 2019 ஏப்ரல் 29-ம் தேதி மாலை, இவர் தனது குடியிருப்பை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவரை காணவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் 2019, மே 1-ம் தேதி புகார் அளித்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எஃப்பிஐ) காணாமல் போனவர்கள் பட்டியலில் மயூஷியை சேர்த்தது. இந்நிலையில் மயூஷி பற்றிய தகவலுக்கு எஃப்பிஐ வெகுமதி அறிவித்துள்ளது.
மயூஷி பற்றி தகவல் அறிந்தவர்கள் நெவார்க் நகரில் உள்ள எஃப்பிஐ அலுவலகம் அல்லது ஜெர்சி சிட்டி நகர காவல் துறையில் தெரிவிக்கலாம். இதன் மூலம் மயூஷி இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டால் அல்லது அவர் மீட்கப்பட்டால் தகவல் அளித்தவருக்கு 10 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8.33 லட்சம்) பரிசு வழங்கப் படும் என்று எஃப்பிஐ தெரிவித்துள்ளது. மயூஷி பகத் ஆங்கிலம், இந்தி,உருது ஆகிய மொழிகளில் பேசுவார். நியூஜெர்சியில் உள்ள சவுத் ப்ளைன்ஃபீல்டு பகுதியில் இவருக்கு நண்பர்கள் உண்டு. 5 அடி 10 அங்குல உயரம், கறுப்பு முடி, பழுப்பு நிற கண்கள் கொண்டவர். அவர் கடைசியாக வண்ண பேன்ட் மற்றும் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருந்தார் என எஃப்பிஐ விவரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qnKQry7
via IFTTT
إرسال تعليق